அஜித்தின் ‘விடாமுயற்சி’ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

விடாமுயற்சி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் உருவாகி இருந்த விடாமுயற்சி திரைப்படம் நேற்று (பிப்ரவரி 6) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி படத்தை இயக்கியிருந்தார். அனிருத் இதற்கு இசை அமைத்திருந்தார். ஓம் பிரகாஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். ஹாலிவுட் படத்தை தழுவி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியானது.
வில்லன் கும்பலால் கடத்தப்பட்ட தன் மனைவி திரிஷாவை நடிகர் அஜித் எப்படி தேடி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை. எந்தவித பில்டப்பும் இல்லாமல் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் அஜித் ரசிகர்களை இந்த படம் திருப்திப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படம் இந்திய அளவில் ரூ. 22 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.