’வேட்டையன்’ பாத்தாச்சா?... இந்த வாரம் ஒடிடி ரிலீஸ் தமிழ் படங்கள் என்ன தெரியுமா?

OTT

வேட்டையன், பிளாக் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இந்த வாரம் ஒடிடியில் வெளியாகியுள்ள திரைப்படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தமிழில் ஒவ்வொரு வாரமும் பல்வேறு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. ஒடிடி தளத்திற்கு கரோனா காலம் முதல் மவுசு அதிகரித்ததால் பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்து காணப்படுகிறது. மேலும் திரையரங்குகளில் எதிர்மறையான விமர்சனங்களை பெறும் படங்கள் ஒடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள தமிழ்ப் படங்களை பற்றிப் பார்க்கலாம்.
 
நவ்வி ஸ்டுடியோஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணைந்து தயாரித்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’வாழை’ திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வாழை படத்தின் 25ஆம் நாள் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், குக் வித் கோமாளி போட்டியாளர் திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனைவரது நடிப்பும் பாராட்டுகளை பெற்றது. இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், இன்று(அக்.11) ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வாழை வெளியாகியுள்ளது.

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான திரைப்படம் 'நந்தன்'. ஜிப்ரான் இசையமைத்துள்ள 'நந்தன்' திரைப்படம் கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. ஜிப்ரான் இசையமைத்துள்ள 'நந்தன்' திரைப்படம் கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இத்திரைப்படம் இன்று (அக்.11) அமேசான் ஒடிடியில் வெளியாகியுள்ளது

மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், விமல், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’போகுமிடம் வெகுதூரமில்லை’.‌ கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி வெளியான விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விமல் மற்றும் கருணாஸின் நடிப்பும் பாராட்டை பெற்றது. இந்நிலையில் ’போகுமிடம் வெகுதூரமில்லை’ திரைப்படம் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சாஜிசலீம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லாந்தர்'. இப்படத்தில் விதார்த், சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Share this story