அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்க போவது யாரை தெரியுமா...? - ஞானவேல் ராஜா பதில்
“இயக்குநர் சிறுத்தை சிவா அடுத்ததாக அஜித்துடன் இணைகிறார் என ‘கங்குவா’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.சூர்யாவின் நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் மிகப்பிரம்மாண்டமான முறையில் ரிலீசானது. சிவாவின் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் கிட்டத்தட்ட 350 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் தான் கங்குவா. தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய படம் என்ற பெருமையுடன் உருவான இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல் என பலர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் – இல் கங்குவா 2 படத்திற்கான லீட் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்த நிலையில் அடுத்தது கங்குவா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெலுங்கு ஊடகத்தினரிடம் கூறுகையில், “அடுத்து இயக்குநர் சிவா அஜித்தை வைத்து புதிய படம் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும். அதன் பிறகு ‘கங்குவா’ 2-ம் பாகத்துக்கான பணிகள் தொடங்கும். ‘கங்குவா 2’ மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது” என்றார். மேலும் ‘கங்குவா’வில் இரைச்சல் அதிகமாக இருப்பது குறித்து அவர் பேசுகையில், “சத்தம் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
அனைத்து திரையரங்கு உரிமையாளர்களிடமும் பேசி, 2 பாயின்ட் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளேன். இது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தவறல்ல. மாறாக, சவுண்ட் மிக்ஸிங்கில் ஏற்பட்ட சிக்கல். முதல் நாளில் கொஞ்சம் எதிர்மறையான விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ‘தேவரா’ படத்துக்கு கூட இது நிகழ்ந்தது. அடுத்தடுத்த நாட்களில் இது மாறும் என நம்புகிறேன். வார இறுதியில் வசூல் அதிகரிக்கும். சூர்யாவின் திரையுலகில் அதிக வசூல் ஈட்டிய படமாக இது இருக்கும்” என்றார்.