மன்னிப்பு கேட்ட இயக்குநர் வசந்தபாலன் - எதற்காக தெரியுமா?

“தன்னுடைய படத்தில் பன்னி மேய்ப்பவரை வில்லனாக சித்தரித்ததற்காக மன்னிப்புக் கோருகிறேன்” என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் பி.கே.ரோஸி திரைப்பட விழா சென்னையில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் வசந்தபாலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.அப்போது பேசிய வசந்தபாலன், “இயக்குநர் பா.ரஞ்சித் வருவதற்கு முன்னால், பட்டியலின மக்கள் குறித்த பார்வை, அதிகாரம் பற்றிய பார்வை தமிழ் சினிமாவில் வேறொன்றாக இருந்தது. நாகராஜ் மஞ்சுலே வந்தபிறகு, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர் வந்த பிறகு அந்த பார்வை மொத்தமாக மாறியது.
என்னுடைய ‘வெயில்’ படத்தில் பன்னி மேய்ப்பவரை வில்லனாக சித்தரித்ததற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நாம் சித்தரிக்கும் கதாபாத்திரங்களை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும், அந்த கதாபாத்திரங்கள் சிறுபான்மையினராக, தலித்தாக, மூன்றாம் பாலினத்தை எப்படி அணுக வேண்டும் என்ற கவனத்தை மிக கூர்மையாக பா.ரஞ்சித் தனது கமர்ஷியல் படங்கள் வாயிலாக கொண்டு வந்ததை முக்கியமான மாற்றமாக பார்க்கிறேன்.மொத்த தமிழ் சினிமாவிலும் அது மாறிவிட்டது. இப்போது வந்த பெரிய படத்தில் தூய்மை பணியாளரை குறை சொன்னாலும் அது குறித்து சமூக வலைதளங்களில் எழுதும் அளவுக்கு அரசியல்படுத்தப்பட்டுள்ளனர். ரஜினி படம் கிடைத்த பிறகு, பணம் வந்த பிறகு திருமண மண்டபம் கட்டலாம், பங்களா வாங்கலாம், ஆனால் பா.ரஞ்சித் குகை நூலகத்தை கட்டியிருக்கிறார். மிகப்பெரிய விஷயம் இது” என்று பாராட்டியுள்ளார் வசந்தபாலன்.