‘ தவறான தகவல்களை நம்ப வேண்டாம்...' : பாடகி கல்பனா விளக்கம்

kalpana

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்தி வெளியான நிலையில், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் பாடகி கல்பனா விளக்கமளித்துள்ளார். 

பின்னணி பாடகி கல்பனா தனது வீட்டில் மயங்கிய இருந்த நிலையில், ஹைதராபாத் போலீஸாரால் கடந்த 4ஆம் தேதி மீட்கப்பட்டார்.  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  “வணக்கம். நான் உங்கள் கல்பனா ராகவேந்தர். என்னை குறித்தும், எனது கணவரைக் குறித்தும் தவறான வதந்தி பரவி வருகிறது. அது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கும் வகையில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளேன்.kalpana

நான் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு, எல்எல்பி போன்ற படிப்புகளை படித்து வருகிறேன். இதோடு நான் சார்ந்துள்ள இசைத்துறையில் அதீத கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் எனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எனக்கு பல ஆண்டுகளாக தூக்கம் என்பது இல்லை. அதற்காக மருத்துவர்களை அணுகிய போது எனக்கு இன்சோம்னியா பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் மருந்து எடுத்துக் கொண்டு வருகிறேன்.

நான் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்தின் டோஸ் அண்மையில் கொஞ்சம் கூடிய காரணத்தால் எனக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான் மயக்க நிலைக்குச் சென்றேன். இப்போது நான் உயிரோடு உங்கள் முன்பு பேசக் காரணம் எனது கணவர் தான். அவர் வெளியூரில் இருந்தாலும் இந்த தகவல் அவருக்கு கிடைத்ததும் முதலில் போலீஸ் தரப்புக்கு தகவல் சொல்லி உள்ளார். அதோடு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவிகளை துரிதமாக ஏற்பாடு செய்தார். அதனால் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று நான் உயிர் தப்பித்தேன்.


அதனால் எந்தவிதமான வதந்தியையும் தயவு செய்து நம்ப வேண்டாம். எனக்கு தனிப்பட்ட சிக்கல் எதுவும் இல்லை. கடவுளின் அருளினால் என் வாழ்வில் எனக்கு கிடைத்த அருமையான விஷயம் என்றால் அது எனது கணவர் பிரசாத் பிரபாகர் மற்றும் எனது மகள் தயா பிரசாத். இந்த தருணத்தில் போலீஸ், ஊடகம், சக இசைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பேன்” என்றார்.

 

Share this story