“எனது படம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்” - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கோரிக்கை

ashwath

எனது அடுத்த படங்கள் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று ‘டிராகன்’ இயக்குநர்  அஸ்வத் மாரிமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான படம் ‘டிராகன்’. இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்து, வசூலிலும் சாதனை புரிந்தது. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. ‘டிராகன்’ படத்தினை தொடர்ந்து, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து.


இதனிடையே, சிம்பு படத்தினை முடித்துவிட்டு தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் அஸ்வத் என தகவல்கள் பரவின. இதனை பலரும் பகிர்ந்து அஸ்வத் மாரிமுத்துக்கு வாழ்த்துகள் சொல்ல தொடங்கினார்கள். ஆனால், அவருடைய தரப்பில் இருந்து, அடுத்து சிம்பு படத்தில் மட்டுமே பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்பட்டது.

தற்போது தனுஷ் படம் குறித்து பலரும் பகிர்ந்து வருவதால் அஸ்வத் மாரிமுத்து, “எனது அடுத்த படங்கள் பற்றி வதந்திகளை பரப்பாதீர்கள். இது அன்பான வேண்டுகோள். எனது அடுத்த படங்கள் முடிவாகும் பட்சத்தில் நானே முதலில் பகிர்வேன். நன்றி” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Share this story