அஜித்தின் ‘விடாமுயற்சி’ வசூலை முந்திய ‘டிராகன்’!

உலகளவில் ‘விடாமுயற்சி’ படத்தின் மொத்த வசூலை ‘டிராகன்’ திரைப்படம் முந்தி சாதனை புரிந்துள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரித்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்’. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வர், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், 2025-ம் ஆண்டு வெளியான படங்களில், உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற இடத்தில் இருந்தது ‘விடாமுயற்சி’. தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் மொத்த வசூலை முறியடித்து முதல் இடத்தை பிடித்திருக்கிறது ‘டிராகன்’. 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ரூ.37 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.