நண்பர்களுக்கு நன்றி கூறி 'டிராகன்' இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு..!

ashwath

‘டிராகன்’ படத்தில் வரும் பேச்சிலர் அறை காட்சிகள் தனது வாழ்க்கையில் நடந்தவை என குறிப்பிட்டு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சியாக  பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் அஷ்வத் மாரித்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்’.  இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வர், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.dragon

இந்நிலையில், படத்தில் வரும் பேச்சிலர் அறை காட்சிகள் தனது வாழ்க்கையில் நடந்தவை என இயக்குனர் அஷ்வத் மாரித்து உருக்கமாக பதிவு வெளியிட்டுள்ளார். 
அதில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்களுக்கு தனியாக நன்றி சொல்வதில்லை. ஏனென்றால் அவர்கள் நமது நண்பர்கள் என்பதால் தவறாக நினைக்க மாட்டார்கள் என நம்புகிறோம். ‘டிராகன்’ படத்தின் பேச்சிலர் ரூம் காட்சிகள் எனது வாழ்க்கையில் நடந்த 90% அப்படியே மறு உருவாக்கம் செய்யப்பட்டது. கதாபாத்திரங்கள் மட்டுமன்றி, அந்த இடமும் கூட.


துரைப்பாக்கத்தில் உள்ள டி.வி.ஹச் பார்க் வில்லாவில் வசித்தோம். அப்போது என்னுடன் கல்லூரி நண்பர்கள் ஐஜி, பம்பு, அன்பு, அஜய், கருப்ஸ், பாலாஜி, ஜெய், முரளி, ஜான், க்ளன், ஹரி, விக்கி (போர்தொழில் இயக்குநர்) ஆகியோர் ஒன்றாக இருந்தோம். இதில் சிலர் மட்டும் வந்துச் செல்வார்கள், ஆனால் அனைவரும் ஒன்றாக அந்த வீட்டில் வாழ்ந்தோம். நான் படத்தில் சொன்னது போன்று, கல்லூரி படிப்பு முடிந்தபின் பூஜ்ஜியமாக இருந்தேன். இந்த நண்பர்கள் தான் என்னுடைய திறமையை நம்பி என்னுடன் இருந்தார்கள். அவர்களின் கடின உழைப்பின் சம்பளத்தில் இருந்து 2000 ரூபாய் கொடுத்து குறும்படங்களை உருவாக்க உதவினார்கள். நாளைய இயக்குநர் போட்டியில் இரண்டு சுற்றுக்கு தேர்வானவுடன் பணம் கேட்க தயங்கினேன். ஆனால் ஐஜி (என் நெருங்கிய நண்பன்) அம்மாவுக்கு போன் செய்து, 2000 ரூபாய் அஸ்வத்துக்கு கொடுத்துவிட்டேன். ஆகையால் பொறுத்துக் கொள்ளவும் என்றான். அதை என்னால் மறக்கவே முடியாது.

முதல் 8 குறும்படங்களுக்கு இவர்கள் அனைவரும் ஒவ்வொரு தருணத்திலும் என்னுடன் இருந்தார்கள். எனது போன் உடைந்த போது, என்னை தொடர்பு கொள்ள இயலவில்லை என பாலாஜி புதிதாக போன் வாங்கிக் கொண்டு பார்க்க வந்தான். என் வாழ்க்கையில் இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். எனது பெரும் ஒவ்வொரு வெற்றியையும் இவர்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Share this story