போதை பொருள் பார்ட்டி விவகாரம்: ஸ்ரீநாத் பாஸி, பிரயாகா மார்ட்டினிடம் விசாரிக்க முடிவு

mollywood

ஸ்ரீநாத் பாஸி, பிரயாகா மார்ட்டினிடம் விசாரிக்க முடிவுகேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போதைப் பொருள் பார்ட்டி நடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து போலீஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு சோதனை செய்தனர். அப்போது பிரபல ரவுடி ஓம் பிரகாஷ், அவரது கூட்டாளி ஷிஹாஸ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள், கொக்கைன் கைப்பற்றப்பட்டன.

இந்த பார்ட்டியில் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி, நடிகை பிரயாகா மாட்டின் உட்பட 20 பேர் கலந்து கொண்டதாக போலீஸாரின் ரிமாண்ட் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகை பிரயாகா இதை மறுத்திருந்தார்.
அவர் கூறும்போது, “என் நண்பர்களைச் சந்திக்கவே ஓட்டலுக்குச் சென்றேன். எனக்கு ஓம் பிரகாஷ் யார் என்றே தெரியாது” எனக் கூறியிருந்தார்.

 
இந்நிலையில் இந்த வழக்கில் ஓட்டல் அறைக்குச் சென்றவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று காவல் ஆணையர் புட்டா விமலாதித்தியா தெரிவித்துள்ளார். இதனால் நடிகர் ஸ்ரீநாத் பாஸி, நடிகை பிரயாகா மார்ட்டினிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் அங்கு எவ்வளவு நேரம் இருந்தனர் என்பது உள்ளிட்ட விவரங்களை போலீஸார் சேகரித்துள்ளனர்.

Share this story