நடிகர் ராதாரவி தலைமையில் செயல்பட்டு வந்த டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சீல்

seal

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் ராதாரவி தலைமையில் செயல்பட்டு வரும் டப்பிங் யூனியன் அலுவலகம் அரசு விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை சாலிகிராமத்தில் டப்பிங் கலைஞர்களுக்கு என தனி அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கு நடிகர் ராதாரவி தலைவராக உள்ளார். இந்த நிலையில், டப்பிங் யூனியன் பணத்தில் அலுவலகத்தில் இரு தளங்களை சீரமைப்பு செய்த நடிகர் ராதா ரவி உறுப்பினர்களுக்கு முறையாக கணக்கு காட்டவில்லை என்றும் அரசின் வீதிகளை மீறி கட்டியதாகவும் உறுப்பினர்கள் சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது குறித்து ஆய்வு செய்து உத்தரவிடும்படி வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்த அதிகாரிகள் ராதாரவியிடம் விளக்கம்   கேட்டிருந்தனர். அத்துடன் விதிகளுக்கு உட்பட்டுதான் கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர்.


 அதன் இறுதியில் டப்பிங் யூனியன் கட்டிடம் அனுமதி இன்றி கட்டப்பட்டு இருப்பதாகவும் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து தலைவர் ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் ராதாரவி தரப்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.  இதை அடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று டப்பிங் யூனியன் கட்டடத்திற்கு சீல் வைத்துள்ளனர். இதனிடையே இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பின்னணி பாடகி சின்மயி,  உறுப்பினர்கள் தங்கள் தலைவரை ஆதரித்தாலும் அப்பட்டமான முறைகேடுகள் மற்றும் சட்டத்தை மீறுபவர்களை என்றாவது ஒரு நாள் பிடிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

Share this story