“கமல் வருவதற்கு முன்பே…” - ‘விக்ரம்’ படப்பிடிப்பில் நடந்தது குறித்து சூர்யா விளக்கம்...!
லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தின் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திர படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன என்பது குறித்து சூர்யா பேசியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்ற கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. இந்தக் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டது. இதனால் இதனை வைத்து தனியாக ஒரு படம் பண்ண முடிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தின் படப்பிடிப்பில் நடந்தது என்ன என்பது குறித்து பேசியிருக்கிறார் சூர்யா.
அதில், “அன்று காலை வரையிலும் என்ன காட்சி என்பது குறித்த பேப்பர் வரவில்லை. நான் ஒரு கெட்டவன் என்பது தெரியும். கமல், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடித்த படத்தில் நான் கடைசி 2 நிமிடங்கள் மட்டுமே வருவேன் என்பது மட்டுமே தெரியும். அரை நாள் படப்பிடிப்பில் தான் காட்சிப்படுத்தினோம்.
கேமரா எல்லாம் வைத்த பின், இதெல்லாம் பண்ண இருக்கிறீர்கள் என்றார்கள். படப்பிடிப்புக்கு முன்பு தான் அனைத்தையுமே முடிவு செய்தார்கள். 20 ஆண்டுகளாக திரையில் நான் புகைபிடித்தது இல்லை. எப்போதுமே பண்ணக் கூடாது என்ற முடிவில் இருந்தேன். நான் இப்போது கெட்டவன், ஏன் இதில் சூர்யாவை கொண்டுவர வேண்டும் என நினைத்தேன். அந்தக் காட்சிக்கு முன்பு சிகரெட் கொடுங்கள் என்று பற்றவைத்தேன்.
கமல்ஹாசனும் படப்பிடிப்புக்கு வரவுள்ளதாக கூறினார்கள். ஆகையால் அவர் வரும் முன்பு அனைத்தையும் முடித்துவிட முடிவு செய்தேன். ஏனென்றால் அவர் முன் என்னால் நடிக்க முடியாது. 3 மணிக்கு வந்துவிடுவார் என்றார்கள். நான் ஒரு மணிக்கே முடித்து தயாராக இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.