'முத்து' பட வசனத்தை பேசி அசத்தும் ஃபகத் ஃபாசில்... 'வேட்டையன்' நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!

rajini

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட  மற்றொரு  காட்சியை  படக்குழு வெளியிட்டுள்ளது. வேட்டையன் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ’வேட்டையன்’. இத்திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. காவல்துறையின் என்கவுண்டர் கொலையினால் பாதிக்கப்படும் சாமானிய மக்கள் மற்றும் உயர்கல்வித் தேர்வு பயிற்சி மையங்களால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஃபகத் பாசில், 'பேட்டரி' என்ற நகைச்சுவை கலந்த திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.



இவருக்கும் ரஜினிக்கும் இடையேயான உரையாடல்கள் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ஃபகத் ஃபாசில் பேசும் “அறிவு இல்லனா போலீஸ் ஆகிடலாம், திருடன் ஆக முடியாது” போன்ற வசனங்கள் அதிகம் ரசிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து படக்குழு வேட்டையன் படத்தில் இடம்பெறாத காட்சிகளை வெளியிட்டு வருகிறது. முன்னதாக வெளியான காட்சியில் ரஜினி, ஃபகத் ஃபாசில் உரையாடல் கவனம் பெற்றது.

அதேபோல் தற்போது இரண்டாவது நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ரித்திகா சிங்கிடம் ஃபகத் ஃபாசில், "பசி, தூக்கம், தும்மல், இருமல், இதெல்லாம் எப்போ வரும்னே தெரியாது" என்ற முத்து பட வசனத்தை பேசுகிறார். இக்காட்சி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இந்த காட்சிகள் நன்றாக இருப்பதாகவும், இதனை படத்தில் ஏன் சேர்க்கவில்லை என படக்குழுவினரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this story