புஷ்பா 2 உடன் போட்டியிடும் 'பேமிலிபடம்' டிரெய்லர் ரிலீஸ்

family man

உதய் கார்த்திக் நடித்த ‘பேமிலிபடம்’ டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.உதய் கார்த்திக், சுபிக்ஷா ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் 'பேமிலி படம்'. விவேக் பிரசன்னா, பார்த்திபன் குமார், ஜா, சந்தோஷ், மோகனசுந்தரம், ஆர்ஜே பிரியங்கா ஜனனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர் 'டைனோசர்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் பிரபலமானார். யுகே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரித்துள்ள இந்தப் படத்தை செல்வகுமார் திருமாறன் இயக்கியுள்ளார். மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு அனிவீ இசையமைத்துள்ளார். அஜிஷ் பின்னணி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி செல்வகுமார் திருமாறன் கூறும்போது, "ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் இருக்கிறார்கள். அதில் கடைசி சகோதரரின் லட்சியத்தை நிறைவேற்ற  ஒட்டுமொத்த குடும்பமே ஆதரவாக நிற்கிறது.


அவரால் அதை நிறைவேற்ற முடிந்ததா, குடும்பத்தில் ஏதும் சிக்கல் நேர்ந்ததா? என்பது கதை. இந்தப் படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை. ஆனால் கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளும் சந்தர்ப்பங்களும் எதிர்மறையாக நிற்க, அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது திரைக்கதை. நகைச்சுவை கலந்த குடும்ப படம் இது. ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. டிசம்பரில் வெளியிட இருக்கிறோம்" என்றார். இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக திரைப்படமாக உருவாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் உதய் கார்த்திக் நடித்த 'பேமிலிபடம்' டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this story