நான் இருக்கிறேன்.. கவலைப்படாதீங்க...பிரபல தயாரிப்பாளருக்கு ஆறுதல் கூறிய சூப்பர் ஸ்டார் !

பிரபல தயாரிப்பாளரான வி.ஏ.துரை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உதவ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன் வந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. என்னம்மா கண்ணு, பிதாமகன், லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இவரது தயாரிப்பில் நடித்துள்ளனர். அதோடு ரஜினியின் ‘பாபா’ படத்தில் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர்.
மனைவி மற்றும் மகளை பிரிந்து சென்னை விரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனாலும் உடலில் உள்ள காயங்கள் இன்னும் ஆரவில்லை. உடல் மெலிந்து காணப்படும் அவர், மருத்து செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.
இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியான நிலையில் நடிகர் சூர்யா 2 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். இந்நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ.துரையை செல்போனில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், நான் இருக்கிறேன், கவலைப்படாதீங்க என ஆறுதல் கூறியுள்ளார். ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு முடிந்து நேரில் வந்து பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார்.