‘கங்குவா’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர் : இயக்குநர் சிவா
“இந்தப் படத்தை இயக்கியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்” என ‘கங்குவா’ படம் குறித்து இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா தெரிவித்துள்ளார். சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் நேற்று வெளியானது. ரசிகர்களுடன் படம் பார்த்த இயக்குநர் சிவா செய்தியாளர்களிடம் கூறுகையில், “படம் சிறப்பாக வந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு திருப்தியாக உள்ளது. பார்வையாளர்களின் வரவேற்பை பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படத்தை இயக்கியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அடுத்து அஜித்துடன் இணைவது குறித்து அவர் தான் சொல்ல வேண்டும். பிரமாண்ட உணர்வு பார்வையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதால் தான் 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம். இரண்டாம் பாகத்துக்கான சிறப்பான லீட் உள்ளது. சூர்யா முன்பே படத்தை பார்த்துவிட்டார். அவருக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி” என்றார்.