திரைப்பட இயக்குநர் ஷங்கர் தயாள் காலமானார்!
'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என புதிய படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ஷங்கர் தயாள், அப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கார்த்தியின் சகுனி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர் தயாள். அதன் பிறகு அவர், நீண்ட காலமாகப் திரைப்படங்கள் எதுவும்ம் இயக்காமல் இருந்தார். இதையடுத்து தற்போது, யோகி பாபுவை வைத்து குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி கவனம் பெற்றது.
இப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஷங்கர் தயாள் அங்கு சென்றிருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு அவரை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், ஷங்கர் தயாள் உடலை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகத் கூறியுள்ளனர்.
ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த கோதண்டராமன்(65) நேற்று முன் தினம்(18.12.2024) உடல்நலக் குறைவு காரணமாக காலமான நிலையில், தற்போது ஷங்கர் தயாள்(54) மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது திரையுலகினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.