மறைந்த பாடகி பவதாரிணியின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

பாடகி பவதாரிணியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
திரைத்துறையில் இசைஞானி என்று பலராலும் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவருடைய மகள் பவதாரிணி சினிமாவில் இசையமைப்பாளராகவும் பாடகியாகவும் வலம் வந்தார். அந்த வகையில் புல்லாங்குழலை விட தனது மென்மையான குரலினால் பல பாடல்களை பாடி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார். ஆனால் அவர் கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தன்னுடைய 47 வது வயதில் புற்றுநோயால் காலமானார். இந்த தகவல் இளையராஜாவின் குடும்பத்தினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய் நடிப்பில் இயக்கியிருந்த கோட் படத்தில் பவதாரிணியின் குரலை ஏஐ மூலம் திரும்பக் கொண்டு வந்திருந்தார். இவ்வாறு தான் மறைந்தாலும் மெல்லிசை குரலாய் இன்றும் என்றும் அனைத்து ரசிகர்கள் மனதிலும் நிலைத்து நிற்பார். மேலும் பவதாரிணியின் கடைசி ஆசை குறித்து அவருடைய கணவர் சபரிராஜ் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது இலங்கையில் புற்றுநோய்க்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த பவதாரிணியின் உடல்நிலை மோசமாக இருக்கும்போது அவர், இளையராஜாவை சந்திக்க விரும்பினார் என்றும் ஆனால் அதுவே பவதாரிணியின் கடைசி ஆசையாக இருக்கும் என யாருமே நினைக்கவில்லை என்றும் உருக்கமாக பேசியுள்ளார்.