‘தி கோட்’ படத்தில் இணைந்த முன்னாள் சி.எஸ்.கே. வீரர்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாவிருக்கும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்க பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைப்பில் நான்கு பாடல்கள் இப்படத்திலிருந்து வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் விஜய் பிறந்தநாளன்று வெளியான வீடியோவும் அதன் பின்பு வெளியான ட்ரைலரும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
இப்படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த பாடகி பவதாரிணி குரல், மறைந்த விஜயகாந்த் மீள் உருவாக்கம், டி.ஏஜிங் செய்யப்பட்ட விஜய் என டெக்னிக்கலாக படக்குழு புது முயற்சிகளை எடுத்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் பட புரொமோஷனில் ஈடுபட்ட இயக்குநர் வெங்கட் பிரபு படத்தில் நிறைய சர்ப்பிரைஸ் இருப்பதாக கூறியுள்ளார்.
இதனிடையே இப்படத்தில் கிரிக்கெட் வீரர் தோனி இடம் பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல் படத்தின் ட்ரைலரில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம், விஜய் அணிந்து வரும் டீ சர்ட் மற்றும் ‘மட்ட...’ பாடலில் வரும் ‘மஞ்ச சட்ட...’ என்கிற வரிகள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரர் எஸ். பத்ரிநாத் இப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் தளப் பதிவில், “நான் முதல் முறையாக ஒரு படத்தில் பணியாற்றியுள்ளேன். தி கோட் படத்தில் சிறிய அளவில் என்னுடைய பங்களிப்பை செலுத்தியுள்ளேன். அதனால் விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று டப்பிங் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பத்ரிநாத் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.