சூதாட்ட செயலி விளம்பரம் : போலீஸ் தரப்பில் நோட்டீஸ் வரவில்லை... நடிகர் பிரகாஷ்ராஜ்

prakash raj

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மீது தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளித்து பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர், "ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு பற்றியும், நான் நடித்த விளம்பரம் பற்றியும் சர்ச்சை நிலவுகிறது. அனைவரையும் கேள்வி கேட்கும் நான் இப்போது பதில் சொல்ல வேண்டி உள்ளது. அந்த விளம்பரத்தில் நான் நடித்தது உண்மைதான். அது தவறு என்று சில மாதங்களிலேயே தெரிந்து கொண்டேன். ஆனால் அந்த விளம்பரத்திற்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் ஆகி இருந்ததால் இடையில் அவர்களை நிறுத்திவிடும்படி என்னால் கேட்க முடியவில்லை.


2017-ம் ஆண்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்துவிட்டேன். ஆனால் அவர்கள் சமூக வலைதளத்தில் எனது பழைய விளம்பரத்தை பயன்படுத்தினர். இதை எதிர்த்து நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். இதற்கிடையே தற்போது என் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்ததாக தெரிகிறது. போலீசார் எனக்கு எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. நோட்டீஸ் வந்தால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்," என்று அவர் கூறியுள்ளார்.



 
 

Share this story