வெற்றிமாறன் கதையில் புதிய படத்தை இயக்கும் கௌதம் மேனன்..?
இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் பொல்லாதவன், விசாரணை, அசுரன், விடுதலை என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போது இவர் விடுதலை 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது மம்மூட்டி நடிப்பில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் வெற்றிமாறன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீபகாலமாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதால் வெற்றிமாறனை சந்தித்து அவருடைய கதை, திரைக்கதை, வசனத்தில் படம் இயக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடத்தினாராம் கௌதம் மேனன்.
இதற்கு வெற்றிமாறனும் சம்மதிக்க இவர்களின் கூட்டணியிலான புதிய படத்தினை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறதாம். மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வெற்றிமாறனின் திரைக்கதையில் சிம்பு நடிக்க இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே வெற்றிமாறன், கௌதம் மேனன், சிம்பு ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.