விஜய்யின் ‘தி கோட்’ 4-வது சிங்கிள் எப்படி? - குத்தாட்டம் போட வைக்கும் இசை!

Matta

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் 4-வது சிங்கிளான  ‘மட்ட’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க ‘குத்தாட்டம்’ போட வைக்கும் இசையுடன் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. பாடலை செண்பகராஜ், வேலு, சாம், நாராயணன் ரவிசங்கர், யுவன் இணைந்து பாடியுள்ளனர். வரிகளை விவேக் எழுதியுள்ளார். 3.29 நிமிடங்கள் ஓடும் பாடலில் மிக சொற்பமான வரிகளை வந்து செல்கின்றன. “மட்ட மட்ட ராஜ மட்ட, எங்க வந்து யாரு கிட்ட” போன்ற வரிகள் கவனம் பெறுகின்றன. மற்றபடி முழுக்க இசையாலேயே பாடல் நிரம்பியிருக்கிறது. கிட்டத்தட்ட ‘பிகில்’ படத்தில் வரும் ‘பிகிலு பிகிலு மா’ பாடலை போல உருவாகியுள்ளதாக தெரிகிறது.

 நடிகர் விஜய்யின் 68-வது படமாக 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (தி கோட்) உருவாகி இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

செப்.5-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதுவரை இப்படத்திலிருந்து 3 பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் சிங்கிளான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இரண்டாவது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்’ விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. மறைந்த பாடகர் பவதாரிணியின் குரல் ஏஐ மூலம் மறுஆக்கம் செய்யப்பட்டு இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.இதனையடுத்து யுவன் குரலில் ‘ஸ்பார்க்’ என்ற பாடலும் அண்மையில் வெளியானது. இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 4வது சிங்கிளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.  

Share this story