வெங்கட்பிரபு இல்லாமல் ‘கோட்’ கொண்டாட்டம்: தங்கை அதிருப்தி
வெங்கட்பிரபு இல்லாமல் நடைபெற்ற ‘கோட்’ படத்தின் ரூ.100 கோடி வசூல் கொண்டாட்டத்திற்கு வாசுகி பாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தினை தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்டார். தமிழகத்தில் மட்டுமே இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.தமிழகத்தில் மட்டும் ஷேர் தொகையாக ரூ.100 கோடி கிடைத்ததாக படக்குழு தெரிவித்தது. இதனை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விநியோகஸ்தர் ராகுல் இருவரும் இணைந்து விஜய்யை சந்தித்து கேக் வெட்டி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்கள்.
இதில் வெங்கட்பிரபு இல்லாதது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தற்போது இதற்கு வெங்கட்பிரபுவின் தங்கை வாசுகி பாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக “அந்த கேக் ஆர்டர் செய்த நேரத்தில், ‘கோட்’ இயக்குநர் வெங்கட்பிரபுவை அழைத்திருந்தால் இது சரியாக இருந்திருக்கும். நீங்கள் கொண்டாடும் ரூ.100 கோடியை வழங்கியதில் அவருக்கும் நிறைய பங்களிப்பு இருந்தது என்று நான் நம்புகிறேன். எங்கள் அணியினரும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்” என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் வாசுகி பாஸ்கர்.
இது இணையத்தில் பெரும் சர்ச்சையினை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து தனது பதிவினை நீக்கிவிட்டார் வாசுகி பாஸ்கர். இவர் தமிழ் திரையுலகில் முன்னணி ஆடை வடிவமைப்பாளராக வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.