'லியோ' பட சாதனையை முறியடித்ததா 'கோட்'?.. முதல் நாள் வசூல் நிலவரம் என்ன?
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று (செப்.5) வெளியான திரைப்படம் கோட் (Greatest Of all time). மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட கோட் திரைப்படம் விஜய் திரை வாழ்வில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும்.
நடிகர் விஜய்க்கு 'கோட்' 68வது படமாக அமைந்த நிலையில், அடுத்து நடிக்கவுள்ள எச்.வினோத் படத்துடன் சினிமாவிற்கு விடை கொடுக்கவுள்ளார். இதனிடையே ’கோட்’ படத்தை ரசிகர்கள் உணர்ச்சிகரமாக கனெக்ட் செய்து கொண்டு கொண்டாடினர். கோட் திரைப்படத்தின் பாடல்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும், படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்பை எகிறச் செய்தது. ஒரு வழியாக நேற்று கோட் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
கோட் படத்தில் மோகன், பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, லைலா, ஜெயராம் என நட்சத்திரங்களுக்கு பஞ்சமில்லை. மற்றொரு புறம் சிவகார்த்திகேயன், த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கேமியோக்கள் இருந்தாலும் ரசிகர்கள் ஒரு தரப்பினர் முழுமையாக படத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. 3 மணி நேரம் என்ற படத்தின் நீளம் நெகட்டிவ்வாக கருதப்படுகிறது. நட்சத்திர நடிகர்கள் கேமியோக்கள் கதைக்கு செயற்கையாக இருந்ததாக ஒரு சில ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர் கோட் படம் விஜய் நடிப்பில் நல்ல கமர்ஷியல் டிரீட்டாக உள்ளது என பாராட்டி வருகின்றனர். மேலும் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை முதல் காட்சி வரை இந்தியா முழுவதும் சேர்த்து, 46 கோடி வசூல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 38 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதேபோல் கோட் உலக அளவில் மொத்தம் 90 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் 100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வட இந்தியாவில் மல்டி ஃபிளக்ஸ் திரையரங்குகளில் கோட் படம் வெளியாகாதது வசூல் குறைந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் வசூல் குறைவில் முக்கிய பங்கு வகிக்கிறது. விஜய் நடிப்பில் முன்னதாக வெளியான ’லியோ’ வெளியான முதல் நாளில் 148 கோடி வசூல் செய்தததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்கள் விநாயகர் சதுர்த்தி மற்றும் விடுமுறை தினங்கள் என்பதால் கோட் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.