‘தி கோட்’ அனுபவம் - மீள முடியாமல் தவிக்கும் மீனாட்சி சௌத்ரி
பிரபல மாடலாக வலம் வந்த மீனாட்சி சௌத்ரி, விஜய் ஆண்டனியின் ‘கொலை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், நான்கு நாட்களில் ரூ.288 கோடி வசூலித்துள்ளது.
இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, டீ ஏஜுங் செய்யப்பட்ட விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து நடனமாடிய ‘ஸ்பார்க்...’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் ரசிகர்களை கவர்ந்த மீனாட்சி, முன்னதாக இந்த பட அறிவிப்பு வெளியான போதே, விஜய்யுடன் நடிக்கவிருப்பதை கனவாக உணர்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்படம் வெளியான பிறகு விஜய்யுடன் நடித்த அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பான மீனாட்சி சௌத்ரியின் இன்ஸ்டாகிராம் பதிவில், “தி கோட் படத்தின் படப்பிடிப்பு உண்மையிலேயே கனவு இல்லை. இன்னும் நிஜ வாழ்க்கைக்கு திரும்ப முயற்சித்து வருகிறேன். படப்பிடிப்பை சிறந்த அனுபவமாக மாற்றியதற்காக ஒட்டுமொத்த படகுழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஸ்ரீநிதி கதாபாத்திரத்திற்கு கிடைத்த அன்பிற்கும் நன்றி” என்று குறிப்பிட்டு, படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.