விக்ரம் ரசிகர்களுக்கு குட் நியூஸ்...‘வீர தீர சூரன்’ படம் வெளியிட அனுமதி; நீதிமன்றம் உத்தரவு

vikram

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீரன் சூரன்’ படத்தை வெளியிட விதித்திருந்த தடை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. 

விக்ரம் நடிப்பில் சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. இப்படம் இரண்டு பாகமாக உருவாகுவதாகவும் முதலில் இரண்டாவது பாகத்தை வெளியிட்டு பின்பு முதல் பாகத்தை வெளியிடலாம் என்ற வித்தியாசமான பிளானில் படக்குழு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை ரியா ஷிபு தயாரித்திருக்க எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

vikram
இப்படம் இன்று(27.03.2025) வெளியாகவுள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று(26.03.2025) இப்படத்திற்கு எதிராக  படத்தில் முதலீடு செய்துள்ள பி4யூ(B4U) என்ற தயாரிப்பு நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. படத்தின் டிஜிட்டல் உரிமையை தயாரிப்பாளர் பி4யூ நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் டிஜிட்டல் உரிமையை விற்பதற்கு முன்னதாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்ததால், ஓ.டி.டி.க்கு விற்க முடியவில்லை என கூறி முதலீடு செய்த தொகையில் 50 சதவீதம் நஷ்டயீடு வழங்க வேண்டும் என பி4யூ நிறுவனம் கோரிக்கை வைத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் இன்று காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.vikram

இந்த வழக்கு மீண்டும் இன்று காலை விசாரணைக்கு வந்த நிலையில் படக்குழு பி4யூ நிறுவனத்துக்கு ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் படம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஏற்கனவே இப்படத்தை வெளியிட விதித்த தடையை 4 வாரங்களுக்குத் நீடித்து நீதி மன்றம் உத்தரவிட்டது. 


இந்த நிலையில் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரியா ஷிபு நேரில் ஆஜராகி பி4யூ நிறுவனத்துக்கு மூன்று நாட்களுக்குள் படத்தின் சாட்டிலைட் தொடர்பான அனைத்து உரிமைகளையும் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 2.5 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் படத்தை வெளியிட அனுமதி வழங்கிய நீதி மன்றம் இரு தரப்பும் எழுத்துப் பூர்வமான பிரமான பத்திரத்தை மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி பத்திரத்தை தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.     

இரு தரப்பு நிறுவனமும் நீதி மன்றம் உத்தரவின் பேரில் மாலை 5 மணிக்குள் பிரமான பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் இதனால் மாலை 6 மணி முதல் வீர தீர சூரன் படம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this story