'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் கோவிந்தா பாடல் முழுவதும் நீக்கம்..!

santa

சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் 'கோவிந்தா' பாடல் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. 


 நடிகர் சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, 'கோவிந்தா... கோவிந்தா...' பாடல், திருப்பதி வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.santa
அவர் தனது மனுவில், திரைப்படத்துக்கு தணிக்கை குழு, யு/ஏ சான்றை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில், குறிப்பிட்ட பாடலில், ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்படுவதாகவும், பாடல் டியூன் மியூட் செய்யப்படும் எனவும் உறுதி தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து பாடல் வரிகள் நீக்கப்பட்டுள்ளதையும், டியூன் மியூட் செய்யப்பட்டதையும் சரிபார்த்து தெரிவிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தனர். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், காலையில் படத்தை பார்த்த போது முழு பாடலும் நீக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதால், வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Share this story