'குட் பேட் அக்லி' பாடல்களை பாராட்டிய நடிகர் தனுஷ் : ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்...!

அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ படத்தின் பாடல்களை நடிகர் தனுஷ் பாராட்டியதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, ’குட் பேட் அக்லி’ படத்தின் பாடலை கேட்டு தனுஷ் என்ன கூறினார் என்பதை பற்றி தெரிவித்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் இரண்டுமே விசுவலுக்காக எடுக்கப்பட்டவை என்றும், பிரமாண்டமான விசுவலை பார்த்த பிறகு தான் இந்த பாடல்களை நான் கம்போஸ் செய்தேன் என்றும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஓஜி சம்பவம் பாடல் தனித்தன்மையுடன் கூடிய எனர்ஜியுடன் உருவாகியுள்ளது என்றும், அதேபோல் இரண்டாவது பாடலான காட் பிளஸ் யூ பாடலும் அனிருத் பாடியதால் மிகுந்த எனர்ஜியுடன் இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும், தனுஷ் தன்னிடம் போன் செய்து "இப்போதுதான் ஓஜி சம்பவம் பாடலை கேட்டேன், ரொம்ப சூப்பரா இருக்கு" என்று வாழ்த்து தெரிவித்ததாகவும், அதேபோல் பல பிரபலங்களும் தன்னிடம் போன் செய்து பாடலை கேட்டுவிட்டு வாழ்த்தினார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
’குட் பேட் அக்லி’ படத்தில் இரண்டே பாடல்கள் தான் இடம் பெற்றுள்ளன. ஓஜி சம்பவம் என்ற பாடலை ஜிவி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலை விஷ்ணு எடாவன் எழுதியுள்ளார். அதேபோல் காட் பிளஸ் யூ பாடலை அனிருத் மற்றும் பால் டாப்பா பாடியுள்ள நிலையில், ரோகேஷ் இந்த பாடலை எழுதியுள்ளார். இரண்டு பாடல்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.