ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து ; ஸ்பெஷல் ப்ரோமோ வெளியிட்ட 'டிரெயின்' படக்குழு

sruti

நடிகை ஸ்ருதிஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு 'டிரெயின்' படக்குழு ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் பிரபல நடிகர் கமல்ஹாசன் மகள் ஆவார். பெரும் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த ஸ்ருதிஹாசன், சிறு வயதிலேயே தந்தை கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் படத்தில் ‘போற்றிப் பாடடி பொன்ணே’ பாடல் பாடியதன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பாடகியாக மட்டுமின்றி கமல்ஹாசன் நடித்த ஹேராம் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் இசைக் கல்லூரியில் படித்த ஸ்ருதிஹாசன், உன்னைப் போல் ஒருவன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் பாடல்கள் பாடி பிரபலமடைந்தார். வாரணம் ஆயிரம் படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய 'அடியே கொள்ளுதே' பாடல் பெரும் ஹிட்டானது. இதனைத்தொடர்ந்து கதாநாயகியாக பாலிவுட்டில் ’luck’ என்ற படத்தில் அறிமுகமானார். குறிப்பாக முதல் படத்திலேயே ஸ்ருதிஹாசன் இரட்டை வேடத்தில் நடித்தார். ஆனால் ’லக்’ திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.


இதனைத்தொடர்ந்து கோலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து, வசூல் சாதனை படைத்த ’ஏழாம் அறிவு’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் தெலுங்கில் ’ஓ மை ஃபிரண்ட்’, ’கப்பர் சிங்’ ஆகிய படங்களில் ஸ்ருதிஹாசன் நடித்தார். தமிழில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’3’ திரைப்படம் ஸ்ருதிஹாசனுக்கு நடிகையாக பெரும் திருப்புமுனை ஏற்படுத்தியது. இந்த படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது.  இந்நிலையில், 

தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள திரைப்படம் ‘டிரெயின்’. இப்படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார். இன்று ஸ்ருதிஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு டிரெயின் படத்தில் அவர் பாடியுள்ள பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 
‘கண்ணுக்குழி காரா’ என்ற பாடலை இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். மேலும் இளவரசி ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என டிரெயின் படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகை ஸ்ருதிஹாசன் ’Inimel’ என்ற ஆல்பம் பாடலுக்கு பிறகு தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story