ரஜினியுடன் மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி: நடிகர் சத்யராஜ்
ரஜினியுடன் மீண்டும் பணிபுரிந்து வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.‘கூலி’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார் சத்யராஜ். இது குறித்து நடிகர் சத்யராஜ் கூறுகையில், “ரஜினியுடன் மீண்டும் பணிபுரிவது சந்தோஷமாக இருக்கிறது. பழைய விஷயங்கள் குறித்து எல்லாம் பேசினோம். உடல்நிலை, உடற்பயிற்சி குறித்து பேசினோம். உங்களுக்கு என்ன வயதாகிறது என்று கேட்டார். 70 என்றவுடன் 70 ஆயிடுச்சா என்று வியந்தார். நானும் 45 வருடமாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். ‘கூலி’ படம் குறித்து எதையுமே சொல்ல முடியாது. ரஜினியும் நானும் ‘மூன்று முகம்’ படத்தில் தான் முதலில் இணைந்து நடித்தோம்.
பின்பு 7-8 படங்களில் அவருடன் நடித்துவிட்டேன். கடைசியாக சேர்ந்து நடித்தது ‘மிஸ்டர் பாரத்’ தான்” என்று தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாஹீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறை வெளியீடு என முடிவு செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.