“Pushpa 3 : The Rampage” பணிகளை தொடங்கியதா படக்குழு..?

Pushpa 3

புஷ்பா 3' திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் எதிர்பார்ப்பின் படி மூன்றாம் பாகத்தில் விஜய் தேவர்கொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘புஷ்பா 2’. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா முதல் பாகம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது.

புஷ்பா முதல் பாகம் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்காக அல்லு அர்ஜூன் தேசிய விருது வென்றார். இதனைத்தொடர்ந்து புஷ்பா 2 பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இப்படத்திற்காக தேவி ஸ்ரீ பிரசாத் தேசிய விருது பெற்றார். இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.



இந்நிலையில் புஷ்பா 2 திரைப்பட பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இன்னும் இரண்டு நாட்களில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், புஷ்பா 3 குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் இன்ஜினியர் ரெசூல் பூக்குட்டி புஷ்பா 3 குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ’Pushpa 3 Rampage’ என்ற டைட்டில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஒரு பக்கம் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ள நிலையில், நடிகர் விஜய் தேவர்கொண்டா புஷ்பா 3 குறித்து சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், இயக்குநர் சுகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் தேவர்கொண்டா, “உங்களது இயக்கத்தில் பணிபுரிய காத்திருக்கிறேன். 2021 - the rise, 2022 - the rule, 2023 - the rampage” என கூறியுள்ளார்.

 


 
முன்னதாக நடிகர் விஜய் தேவர்கொண்டா புஷ்பா 2 வெளியீட்டை முன்னிட்டு அல்லு அர்ஜூனுக்கு புஷ்பா பெயர் போட்ட டீசர்ட்டை பரிசாக வழங்கினார். புஷ்பா 3 குறித்த அறிவிப்பு இரண்டாம் பாகம் வெளியான பிறகு படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story