ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ ட்ரெய்லர் எப்படி? - ரத்தமும் யுத்தமும்!

devera

ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘தேவரா பாகம் 1’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்துள்ள படத்துக்கு ‘தேவரா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


‘கேஜிஎஃப்’ பட பாணியில் தொடங்கும் ட்ரெய்லரில் பிரகாஷ் ராஜ் பின்னணி குரலில் பில்டப் ஏற்றுகிறார். “அவங்களுக்கு பயம்னா என்னானே தெரியாது. முதன் முறையா அவங்கள பயம் மேகங்கள் சூழ்ந்துச்சு. ரத்தத்தால கடல் சிகப்பான கதை இது” என பிரகாஷ் ராஜின் பில்டப்புக்குப் பின் என்டிஆர் தோன்றுகிறார். தொடர்ந்து ஆக்‌ஷன், பில்டப் என நகரும் ட்ரெய்லரில் ஜூனியர் என்டிஆரை கொல்ல எதிரிகள் திட்டமிடுகின்றனர். ஜூனியர் என்டிஆர் vs எதிரிகள் என்ற யுத்தமும் ஒருபுறம் நடக்கிறது. ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்கு நடுவே, ஜான்வி கபூர் வந்து செல்கிறார். சயீஃப் அலிகானின் வித்தியாசமான தோற்றம் கவனம் பெறுகிறது. படத்துக்கு அனிருத் இசை பலம் சேர்க்கும் எனத் தெரிகிறது. மற்றபடி ட்ரெய்லரில் புதிய அம்சங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. படம் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Share this story