சத்ய தேவின் ‘ஜீப்ரா’ ட்ரெய்லர் எப்படி? - கவனம் ஈர்க்கும் ஆக்ஷனும், இசையும்!
தெலுங்கு நடிகர் சத்ய தேவ் நடித்துள்ள ‘ஜீப்ரா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்ய தேவ் நடிக்கும் திரைப்படம் ‘ஜீப்ரா’. இந்தப் படத்தில் தாலி தனஞ்செயா, பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில், சத்யராஜ், கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி பான் இந்தியா முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது. ஆக்ஷன், காமெடி கலந்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் சத்யராஜின் கெட்டப் கவனம் ஈர்க்கிறது. ரவி பஸ்ரூரின் பின்னணி இசை நன்றாகவே பொருந்துகிறது. ப்ரியா பவானி சங்கர் தலை காட்டிச் செல்கிறார். சுனிலின் வில்லன் கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும் எனத் தெரிகிறது. சத்யராஜ், சுனில் போன்ற கதாபாத்திரங்களை ரசிக்கும்படியாக உருவாக்கியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.