“தோல்விகளை ஏற்றுக் கொள்கிறேன்” - திரையுலக பின்னடைவு குறித்து சமந்தா பகிர்வு...!
தனது சமீபத்திய படங்கள் சரிவர வரவேற்பை பெறாத நிலையில், இது தொடர்பாக மனம் திறந்துள்ள நடிகை சமந்தா, “தோல்விகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Ask me anything’ என பதிவிட்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், சமீபத்திய திரைபடங்களின் தோல்விகள் குறித்து பேசிய அவர், “நான் கடந்த காலங்களில் தவறு செய்துள்ளேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். சில விஷயங்கள் சரியாக அமையவில்லை. அதனால் நான் தோல்விகளை ஒப்புக் கொள்கிறேன். சமீபத்திய சில படங்களில் நான் என்னுடைய பெஸ்டை கொடுக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். நான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரத்திலும் சிறப்பாக செயல்படுவேன் என்று ஒவ்வொரு முறை நானே எனக்குள் சொல்லிக் கொள்வேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் முந்தைய கதாபாத்திரங்களை விட சவால் நிறைந்ததாக இருக்கும்” என்றார்.
அடுத்து வெளியாக உள்ள ‘சிட்டாடல் ஹனி பனி’ வெப் சீரிஸ் குறித்து பகிர்ந்து கொண்ட அவர், “ரிலீஸுக்கு முன்பே நான் பெருமைப்பட கூடிய ஒரு விஷயம் தான் இந்த வெப்சீரிஸ்.என்னுடைய திரைப்பயணத்திலேயே மிகவும் சிக்கலான சவாலான கதாபாத்திரமாக இது அமைந்தது. நீங்களே பார்த்து தெரிந்து கொள்வீர்கள்” என தெரிவித்துள்ளார். இந்த இணையத் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் நவ.7-ம் தேதி வெளியாகிறது. சமந்தாவின் திரைப்பயணத்தை பொறுத்தவரை 2020-க்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ‘காதலும் கடந்து போகும்’, ‘யசோதா’, ‘சாகுந்தலம்’, ‘குஷி’ என அடுத்தடுத்து படங்கள் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.