‘ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிந்து தான் வாழ்கிறேன்... விவாகரத்து பெறவில்லை... : சாய்ரா பானு அறிக்கை

ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என தன்னை அழைக்க வேண்டாம் என சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவியுமான சாய்ரா பானுவும் தங்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு விடை கொடுத்து பிரிவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தனர். அப்போது சாய்ரா பானு ஆடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் உடல்நலன் சார்ந்து மும்பையில் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை உடலில் நீர்ச்சத்து குறைந்த காரணத்தால் ரஹ்மான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனிடையே, சாய்ரா பானு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரஹ்மான் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். நாங்கள் இருவரும் இன்னும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் கணவன், மனைவி என்ற பந்தத்தில் இருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளாக எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாங்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். அவருக்கு எந்த வகையிலும் நான் அழுத்தம் தர விரும்பவில்லை. அதனால் என்னை ஏ.ஆர்.ரஹ்மானின் முன்னாள் மனைவி என்று சொல்ல வேண்டாம் என ஊடகங்கள் வசம் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பிரிந்திருந்தாலும் அவருக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என சாய்ரா பானு கூறியுள்ளார்.
Music Composer AR Rahman's wife says, "I wish him (AR Rehman) a speedy recovery. I received the news that he suffered chest pain and underwent angioplasty. By the grace of god, he is fine now. I would also like to say that we are not officially divorced, we are still husband and… https://t.co/2DGj0NnoBo pic.twitter.com/ytM0ZgmLDi
— ANI (@ANI) March 16, 2025
இது தொடர்பாக அவரது தரப்பில் வெளியாகி உள்ள அறிக்கையில், “திருமணம் ஆகி பல ஆண்டுகள் கடந்த நிலையில் தனது கணவர் ரஹ்மானை பிரிந்து வாழ சாய்ரா பானு முடிவு செய்தார். இது மிகவும் கடினமான முடிவுகளில் ஒன்று.அவர்களது மண வாழ்க்கையில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பிரிந்து வாழும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குள் ஆழமான அன்பு இருந்தபோதிலும், சில சிரமங்கள் காரணமாக பிரிந்துள்ளனர். வலி மற்றும் வேதனை காரணமாக இந்த முடிவை சாய்ரா எடுத்துள்ளார். தன் வாழ்க்கையின் கடினமான அத்தியாயத்தை கடந்து செல்லும் சவாலான இந்நேரத்தில் பிரைவசி வேண்டும் என சாய்ரா விரும்புகிறார்.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.