“சூர்யாவுக்கு நான் கதை எல்லாம் சொல்லபோவதில்லை" : இயக்குநர் மிஷ்கின் பேச்சு
“நீங்கள் கொஞ்சம் கருணையோடு படங்களைப் பார்க்க வேண்டும். சூர்யா போன்ற ஒரு நல்ல, அழகான நடிகரை நாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் தற்போது சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசுவதை வைத்து அடுத்து சூர்யாவிற்கு கதை சொல்ல போகிறேன் என்று நினைக்காதீர்கள். நான் அவருக்கு கதையெல்லாம் சொல்லபோவதில்லை’’ என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. இத்திரைப்படத்தை பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், “சமீபத்தில் ஒரு பெரிய படம் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். படம் நன்றாக இல்லை என்றால் ரசிகர்கள் கோபமடைகிறார்கள். அது அவர்களின் உரிமைதான். ஆனால் படங்களை நாம் கருணையோடும் அன்போடும் பார்க்க வேண்டும். சூர்யாவின் ‘கங்குவா’ படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. இருந்தாலும் அந்தப் படத்தைப் பற்றி விமர்சனங்கள் வந்தது.
இன்னும் நீங்கள் கொஞ்சம் கருணையோடு படங்களைப் பார்க்க வேண்டும். சூர்யா போன்ற ஒரு நல்ல, அழகான நடிகரை நாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்முடன் சிவாஜி இல்லை. எம்.ஜி.ஆர் இல்லை. ஆனால் அவர்களுடன் பணியாற்றிய சிவக்குமார் என்ற ஒரு மனிதர் இருக்கிறார். எவ்வளவு முக்கியமான ஒரு மனிதர் அவர். அவருடைய வீட்டில் இருந்து வந்த இரண்டு குழந்தைகளும் மிகவும் நல்லவர்கள். நான் தற்போது சூர்யாவிற்கு ஆதரவாகப் பேசுவதை வைத்து அடுத்து சூர்யாவிற்கு கதை சொல்ல போகிறேன் என்று நினைக்காதீர்கள். நான் அவருக்கு கதையெல்லாம் சொல்லபோவதில்லை. என்னிடம் அவர்கள் கேட்டாலும் படம் பண்ணப்போவதில்லை. ஆனால் நான் கருணையோடு பார்க்க சொல்கிறேன்.
ஒரு படத்துக்காக நாங்கள் வாழ்க்கையை மறந்து வேலை செய்து வருகிறோம். 24 மணி நேரமும் ஒருமித்த சிந்தனையுடன் ஒரு ராக்கெட்டை உருவாக்கும்போது, ஒரு சின்ன ஒயர் பிரிந்தாலும் வானில் வெடித்து விடுகிறது. சினிமாவும் அப்படித்தான். 500 கலைஞர்கள் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்குகிறோம். இயக்குநர் இறக்கும் அளவுக்கு சென்ற பின் தான் ஒரு படம் உருவாகிறது. படம் நன்றாக இல்லை சொல்வதற்கு என அனைவருக்கும் உரிமை உண்டு. காரணம் நீங்கள் ரூ.150 தருகிறீர்கள்.” என மிஷ்கின் தெரிவித்துள்ளார்.