“நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல ” : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா!
![ilayaraja](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/baf8d9d748a2558707bf4c337aa60362.png)
தன்னை குறித்து வரும் வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் டிசம்பர் 16ஆம் தேதி காலை திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி, நாட்டியஞ்சலி நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது இளையராஜா கோயிலின் அர்த்த மண்டபத்திற்க்குள்ளாக அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை விளக்கமளித்தது.
இந்நிலையில் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக் கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.