'விஜய் தவறான பாதையில் செல்கிறாரோ என கவலையாக உள்ளது' - இயக்குனர் மோகன் ஜி
விஜய் தவறான பாதையில் செல்கிறாரோ என கவலையாக உள்ளது என இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 'சேவகர்' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மோகன் ஜி கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது "மலையாள சினிமா துறையில் பாலியல் புகார்கள் உள்ளது போல், தமிழ் சினிமா துறையிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இங்கு அது குறித்து வெளிப்படையாக யாரும் பேசுவது கிடையாது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார்களை தெரிவிக்க வேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம். தமிழ்நாட்டுக்கு ஒரு புதிய தலைவர், இளைஞர்களுக்கு பிடித்த ஒரு தலைவர் வருவது மிகவும் நல்ல விஷயம்தான். ஆனால் நடிகர் விஜய் தவறான பாதையில் செல்கிறாரோ என கொஞ்சம் கவலையாக உள்ளது. அவர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததும், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதும வருத்தத்தை அளிக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை. இந்துக்களுக்கு ஆதரவு கொடுத்தால் பா.ஜ.க.வை ஆதரிப்பது போன்ற தோரணையை சிலர் உருவாக்கி விடுவதால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல பயப்படுகிறார்கள். அதை முதலில் சரிசெய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது வேறு, பா.ஜ.க. வை ஆதரிப்பது என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.