‘கல்லூரிகளில் பட ப்ரமோஷன் செய்வதில் உடன்பாடில்லை..' ‘பிரீடம்’ படம் ஒரு உண்மைக்கதை - சசிகுமார்..!!

நான் நடிக்கும் படங்களை கல்லூரிகளுக்கு சென்று பிரமோஷன் செய்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
சத்திய சிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஃப்ரீடம்’. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபிள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர்கே செல்வமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிகுமார், “ ‘பிரீடம்’ திரைப்படம் ‘டூரிஸ்ட் பேமிலி ’போன்று காமெடி கலந்த படமாக இருக்காது. இது 1991 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுத்த படம். இலங்கை தமிழர்களை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று அவர்கள் எந்த மாதிரி விசாரணை செய்யப்பட்டார்கள் மற்றும் அவர்கள் வேலூர் சிலையில் எப்படி தப்பித்தார்கள் போன்ற உண்மை சம்பவங்களை மையப்படுத்தி தான் இந்த திரைப்படம் இருக்கும்.
நான் நடித்த படங்கள் பெரும்பாலும் புதுமுக இயக்குனர்களுக்கு தான் நடித்திருப்பேன் மேலும் தோல்வி அடைந்த இயக்குனர்களுக்கே நான் வாய்ப்பு கொடுத்து இருப்பேன். சமுத்திரக்கனி ஒருவருக்கு மட்டும் தான் ‘நாடோடிகள்’ பட வெற்றிக்கு பிறகு ‘போராளி’ திரைப்படத்தில் நடித்தேன். எல்லோரும் கேட்கிறார்கள் மீண்டும் இலங்கை தமிழராக, இலங்கை தமிழ் பேசும் படத்திலேயே நடிக்கிறீர்களே ? என்று அதுவும் என் தமிழ் தானே. இந்த படம் எந்த அரசியலையும் பேசப்போவதில்லை; யாரையும் தாக்கி பேசப்போவதில்லை; ஒரு மனிதரின் வலியையும் ஒரு இனத்தின் வலியையும் பேசக்கூடிய படமாக இத்திரைப்படம் அமையும். சுதந்திரம் என்பது சொந்த நாட்டில் சொந்த மண்ணில் சொந்த மக்களுடனே வாழ்வதுதான் சுதந்திரம். அங்கு சுதந்திரம் இல்லாமல் வெளியூர்களிலும் வெளிநாட்டுகளிலும் வசிக்கும் மக்களுக்காக இந்த திரைப்படத்தை சமர்ப்பிக்கிறோம்” என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நடிகர் சசிகுமார் பதிலளித்தார். அப்போது தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி, ஃப்ரீடம் திரைப்படத்தில் இலங்கை தமிழராகவே நடிக்கிறீர்களே? இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “நான் தமிழருக்கு ஆதரவு” என்று பதில் அளித்தார். மேலும் படத்தின் தலைப்பை தமிழிலேயே வைத்திருக்கலாமே? என்ற கேள்விக்கு, “எனக்கு தமிழில் தான் வைக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் ‘சுதந்திரம்’, ‘விடுதலை’ போன்ற தலைப்புகளில் படங்கள் வந்துவிட்டது. மேலும் ஆங்கிலத்தில் வைத்தால் அனைத்து மொழிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தான் இந்த தலைப்பை தேர்வு செய்தோம்” என்றார்.
டூரிஸ்ட் பேமிலி ரூ 90 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் உங்களது சம்பளத்தை உயர்த்தி விட்டீர்களா? என்ற கேள்விக்கு, “நான் அதே சம்பளத்தை தான் வாங்குகிறேன். மேலும் என்னை பார்த்து நீ என்ன காந்தியா? என்று கேட்கிறார்கள்; எவ்வளவு தூரம் பாராட்டுக்கள் வருகிறதோ , அதே வகையில் திட்டுகளும் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன்” என்று பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம் கல்லூரிகளிலோ அல்லது பெரிய அளவிலோ இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளை ஏன் வைக்கவில்லை என்ற கேள்விக்கு, “என் படங்களை கல்லூரிகளுக்கு சென்று பிரமோஷன் செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது; அது ஒரு இன்ஸ்டிடியூஷன் , அங்கு சென்று எனது படங்களை விளம்பரம் செய்ய நான் விரும்பவில்லை. அவர்கள் படிக்கத்தான் வந்திருக்கிறார்கள். அதனை நான் தவறான முறையில் பயன்படுத்திக் கொள்ள எனக்கு உடன்பாடு இல்லை.” என்று தெரிவித்தார்.