எப்போதும் உங்களை நேசிக்கிறேன் தலைவா..!! - ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநரை பாராட்டிய ரஜினி..

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவை நேரில் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
சசிக்குமார் - சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மக்களால் அதிகளவில் கொண்டாடப்படும் படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் மே.1ம் தேதி வெலியான இந்த திரைப்படம் குறைவான பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் பல மடங்கு லாபம் எடுத்த திரைப்படமாக ஆகியிருக்கிறது. உதவி இயக்குநராகக் கூட யாரிடமும் பணியாற்றிடாத 24 வயதான ஒரு இளைஞர் இயக்குனர் ஆகி சாதித்திருக்கிறார்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகர்கள் ரஜினி, சூர்யா, நானி மற்றும் இயக்குநர் ராஜமௌலி என பல பிரபலங்களும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை வியந்து பேசி பாராட்டி வருகிறார்கள். எதார்த்தமான கதைகளத்தோடு மக்களை கவர்ந்து வரும் இந்த திரைப்படம் ஓடிடியிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘டூரிஸ் ஃபேமிலி’படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்தை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கான காரணம் இன்று முழுமை அடைந்திருக்கிறது. அவர் என்னுடைய பெயரை அழைத்த விதமும், கட்டியணைத்ததும் புல்லரிக்க வைத்தது.
நான் சிறிய வயதில் பிரார்த்தனை செய்த அத்தனைக்கும் அவரது சிரிப்பு ஒன்றே போதுமென இருந்தது. சிறிது தாமதமாக நடந்தாலும் எனக்கு தேவைப்பட்டபோது நடந்தது. என்ன மாதிரி எளிமையான ஒரு மனிதர். எளிமையான மற்றும் தலைச்சிறந்தவர் என்பதற்கு உதாரணம் ரஜினி சார். இதைவிட பெரிய ஊக்கமும், ஆசிர்வாதமும் கிடைக்கப்போவதில்லை. எப்போதும் உங்களை நேசிக்கிறேன் தலைவா..! ” என்று குறிப்பிட்டுள்ளார்.