விஜய் அழைக்காவிட்டாலும் தவெக மாநாட்டிற்கு செல்வேன் : நடிகர் விஷால்

vijay

விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநாட்டிற்கு பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விஷால் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, விஜய் அழைப்பு விடுக்காவிட்டாலும், நான் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு செல்வேன் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஷால் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் நடந்த ஆசிட் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு, அவர் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு அழைப்பு வந்திருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ’இதுவரை அழைப்பு வரவில்லை; ஆனால் ஒரு வாக்காளராக, தமிழக வெற்றி கழக மாநாட்டுக்கு செல்வேன். அழைப்பு விடுக்காமலேயே சென்று, விஜய் என்ன பேசுகிறார் என்பதை கேட்பேன்.vijay

இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகளை விட, விஜய் என்ன நல்லது செய்யப் போகிறார் என்பதை அறிய, தமிழக வெற்றி கழக மாநாட்டில் மக்களோடு மக்களாக சென்று பார்ப்பேன். மாநாட்டிற்கு அழைப்பு தேவையில்லை; மாநாட்டில் எங்கேயாவது ஒரு ஓரத்தில் நின்று அவர் என்ன பேசுகிறார் என்பதை நான் பார்ப்பேன். ஒரு புதிய அரசியல்வாதி வருகிறார் என்றால், அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்க வேண்டும். அவர் பேசுவதை கேட்க வேண்டும்; அதற்காக நான் மாநாட்டுக்கு செல்வேன் என்று கூறினார்.

இதனை அடுத்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைவீர்களா என்று கேட்ட கேள்விக்கு, ’விஜய் கட்சியில் இணைவேனா என்பதற்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. அவர் முதலில் மாநாடு நடத்தட்டும்; இப்போதுதான் முதலில் அடியை எடுத்து வைக்கிறார். அதன்பின், அவர் என்ன செய்யப் போகிறார், அவரது செயல்பாடுகள் என்ன என்பதற்கேற்ப தான், அவருடைய கட்சியில் இணைவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறினார்.

Share this story