இளையராஜா பயோபிக் : தீயாக வேலை செய்யும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்!
தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக பார்க்கப்படக்கூடிய இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இசைத்துறையில் இவர் அடைந்த உச்சமும் இசைத்துறையில் இவர் படைத்த சாதனைகளும் இதுவரை யாருமே படைக்கவில்லை எனக் கூறலாம். கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக தமிழ் சினிமாவின் அடையாளமாக முகவரியாக இருந்து வருகின்றார் எனலாம்.இந்நிலையில், இவரது சொந்த வாழ்க்கையையும் திரைத்துறை வாழ்க்கையையும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் படமாக எடுக்கின்றார். இந்தப் படத்தில் இளையாராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கின்றார். இது தொடர்பான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதனால் இந்த படத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது. இளையராஜா பயோ பிக்: இயக்குநர் அருண் மாதேஸ்வரனும் தனுஷும் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றினர். கேப்டன் மில்லர் படத்திற்காக அருண் மாதேஸ்வரன் செலுத்திய ஈடுபாடும் உழைப்பும் தனுஷை மிரள வைத்துள்ளது. இதனால்தான் தனுஷ் இளையராஜாவின் பயோபிக் படத்தினை இயக்கும் பணியை அருண் மாதேஸ்வரனிடம் கொடுக்கலாம் என இளையராஜாவிடம் கூறியதாகவும், இளையராஜாவும் இதற்கு ஓ.கே. சொன்ன பின்னர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்திற்குள் வந்ததாகவும் கூறப்படுகிறது.
மொத்தம் இரண்டு பாகங்களாக இளையராஜாவின் பயோபிக் உருவாகவுள்ளது என்ற தகவல்கள் சினிமா வட்டாரத்தில் அதிகம் உலா வருகின்றது. அதில் முதல் பாகத்தில் இளையராஜாவின் இளமைக்காலமும் அதன் பின்னர் அவர் சென்னைக்கு வந்து சேர்ந்தததும்தான் இடம் பெறப்போகின்றதாம். மேலும் இரண்டாம் பாகத்தில் இளையராஜாவின் சினிமா வாழ்க்கை இடம் பெறப்போகின்றது என்ற பேச்சு அடிபட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக இயக்குநர் அருண் மாதேஸ்வரனும் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்ட பண்ணைபுரத்திற்குச் சென்று அங்கு இளையராஜாவின் உறவினர்களைச் சந்தித்து அவர் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகின்றார். இது மட்டும் இல்லாமல் இளையராஜாவுடனே இருந்து அவரது இளமைக்காலம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகின்றார். இது தொடர்பாக இளையராஜாவுடன் அவரது சொந்த ஊரில் இருக்கும் புகைப்படத்தினை தனது எக்ஸ் பக்கத்தில் 'இசை (இளையராஜா) ஓர் அற்புதம்' என குறிப்பிட்டுள்ளார். அருண் மாதேஸ்வரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளித்தெளித்து வருகின்றனர். இளையராஜாவே இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகின்றது.