சட்டவிரோத செயல்... நடிகர் யஷ் நடிக்கும் டாக்சிக் படக்குழு மீது வழக்குப்பதிவு
'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு அடுத்த படத்திற்கு 1 வருடத்திற்கு மேலாக காலம் எடுத்து கொண்டார். இவரின் அடுத்த பட அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். ‘டாக்சிக்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ முன்னதாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது தள்ளி போகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி தற்போது மும்பையில் நடந்து வருகிறது.
சமீபத்தில், கர்நாடக சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஷ்வர் காந்த்ரே, இப்படத்தின் படப்பிடிப்பிற்காக பீன்யாவில் உள்ள காட்டு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (எச்எம்டி) மீது குற்றம் சாட்டினார். இதையடுத்து “எச்.எம்.டி.யின் அதிகார வரம்பிற்குட்பட்ட வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் படப்பிடிப்பிற்காக சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது என்றும் இது செயற்கைக்கோள் படங்களால் கண்டறியப்பட்டது என்றும் கூறியிருந்தார். பின்பு மரம் வெட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பிற்காகப் பெங்களூருவில் செட் அமைப்பதற்கு வனப்பகுதியில் உள்ள மரங்களை சட்டவிரோதமாக வெட்டியதாக படத்தின் தயாரிப்பாளர் மீது கர்நாடகா வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் நிலத்தின் உரிமையாளர் கனரா வங்கி மேலாளர் மற்றும் ஹிந்துஸ்தான் மெசின் டூல் மேலாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.