”எனக்கு அடுத்த மாதம் திருமணம்”.. திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு பின் கீர்த்தி சுரேஷ் பேட்டி

keerthi suresh

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன், ரெமோ ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார். பின்னர் விஜய்யுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் சண்டக்கோழி 2, அண்ணாத்த, மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நாக் அஷ்வின் இயக்கத்தில் சாவித்ரி வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்து பாராட்டை பெற்றார். இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வென்றார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளிவரும் என அவரது தந்தை கூறியிருந்தார். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு, “15 வருட காதல்... எப்போதும் ஆண்டனி மற்றும் கீர்த்தி (lykyk)” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவின் மூலம் தனது காதல் திருமணத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்தார்.


இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ், “அடுத்ததாக எனது படம் பாலிவுட்டில் 'பேபி ஜான்' ரிலீசாகிறது. அடுத்த மாதம் எனக்கு திருமணம் நடைபெறுகிறது.


அதனை முன்னிட்டு நான் திருப்பது கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தேன்” என்றார். திருமணம் எங்கு நடைபெறுகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, திருமணம் கோவாவில் நடைபெறுகிறது என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Share this story