ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இமானின் செயல்...!

இசையமைப்பாளர் டி இமான் முழு உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக இருப்பவர் இசை அமைப்பாளர் இமான். இவரது இசையில் வெளிவந்த மெலடி பாடல்கள், குத்துப் பாடல்கள் ரசிகர்களை கவரும் வகையில் இடம் பெறுகின்றன. இவர் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை ஒட்டி பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நாளில் இமான் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனது முழு உடல் உறுப்புகளையும் தானம் செய்துள்ளார். இதுகுறித்து இமான் வெளியிட்டுள்ள வீடியோவில்,
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இதை செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக எனது மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. இன்று இதனை செய்துள்ளேன். முழு உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளேன். அதற்கான உறுப்பினர் அட்டையும் பெற்றுள்ளேன். என்னுடைய காலத்திற்கு பிறகு எனது உடலில் பயன்படக்கூடிய உறுப்புகள் வேறு ஒருவருக்கு பயன்உள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.