“10 வருஷத்தில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது” - யுவன்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ‘தி கோட்’ படத்திற்கு பிறகு, ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் தனது தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஸ்வீட் ஹார்ட்’ உள்ளிட்ட படங்களில் இசையமைத்து வருகிறார். இதனிடையே இசை நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வரும் அவர் ‘U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ என்ற தலைப்பில் பெங்களூர், இலங்கை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியிருந்தார். அடுத்ததாக G.O.A.T என்ற தலைப்பில் வருகிற அக்டோபர் 12ஆம் தேதி கோவையில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். இதற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. அதில் யுவன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது இசை நிகழ்ச்சி குறித்து யுவன் பேசுகையில், “இந்த முறை நான் நடத்தும் இசை நிகழ்ச்சியில் அந்தந்த பகுதியிலுள்ள பாடகர்களை பாட வைக்கவுள்ளேன். இதை கோவையில் இருந்து தொடங்கலாம் என நினைக்கிறேன். இந்த இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் நன்றாக வைப் செய்தால்தான் அதற்கேற்ப உற்சாகமாக நானும் பாட முடியும்” என்றார்.
அதன் பிறகு ஏ.ஐ தொழில் நுட்பம் குறித்த கேள்விக்கு, “ஏற்கனவே இதை வைத்து பவதாரிணியின் குரலை பயன்படுத்திவிட்டேன். இதனால் வரும் காலங்களில் பாடகர்களின் எண்ணிக்கை கண்டிப்பாக குறைய வாய்ப்பிருக்கிறது. இன்னும் 10 வருஷத்தில் இசையமைப்பாளர்களுக்கே வேலை இருக்காது. ஏ.ஐ. தொழில் நுட்பம் அந்த வேலையை முழுமையாக எடுத்துக்கொள்ளும். யாருக்கெல்லாம் இசை தேவைப்படுகிறதோ அவர்கள் ஏ.ஐ. மூலம் இசையை உருவாக்கி பணம் சம்பாதித்து கொள்வார்கள். ஆனால் மனிதர்கள் அளவிற்கு உருவாக்க முடியாது. எதிர்காலத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் இறக்குமதி செய்யப்படும்” என யுவன் பதிலளித்தார். விஜய்யின் கட்சிக்கு எதாவது பாடல் பண்ணுவீர்களா? என்று கேள்விக்கு, “என்னிடம் கேட்டால் அதையும் செய்துகொடுப்பேன்” என்று பதிலளித்தார்.