இன்னும் கொஞ்ச நேரம் தான், அப்புறம் ஜெயலலிதா எப்பவும் உங்களுக்குத்தான்… ‘தலைவி’ ட்ரைலர் அப்டேட் வெளியிட்டுள்ள கங்கனா!
நாளை(மார்ச் 23) நடிகை கங்கனா ரணாவத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவி’ படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது.
இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் கடினமாக உழைத்துள்ளதாக கங்கனா தெரிவித்திருந்தார். தனது உடலை 20 கிலோ வரை ஏற்றி இறக்கியதாகத் தெரிவித்தார். மேலும் தான் செய்த இந்த விஷயத்தை இந்தியாவில் இதுவரை வேறு எந்த நடிகையும் செய்ததில்லை என்றும் பெருமிதம் கொண்டார்.
நீண்ட நாட்களாக தலைவி படத்தின் ட்ரைலர் அப்டேட் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் கங்கனாவின் பிறந்தநாளான மார்ச் 23 அன்று ட்ரைலர் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்திருந்தனர். நாளை தலைவி படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதை அடுத்து கங்கனா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “தலைவியின் டிரெய்லர் வெளியாக இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ளது. இந்த காவிய வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் போது நான் 20 கிலோ எடை கூட்டியதும், சில மாதங்களுக்குள் அதை குறைத்தது என நான் சந்தித்த சவால்கள் இது ஒன்று மட்டுமல்ல. சில மணிநேரங்களில் உங்கள் காத்திருப்பு முடிவடையும். ஜெயா எப்பொழுதும் உங்களுக்கானவராய் இருப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.
தலைவி படத்தில் அரவிந்த் சாமி எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துளளார். நடிகை பூர்ணா சசிகலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி ஆர்எம் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.