ஓடிடி சர்ச்சையில் ‘இந்தியன் 2’ - புதிய சிக்கலின் பின்புலம் என்ன?

Indian 2

ஓடிடி வெளியீட்டின் மூலம் மீண்டும் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது ஷங்கர் - கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படம். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் ஜூலை 12-ம் தேதி வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான படங்களில் மிக மோசமான விமர்சனங்களை பெற்று படுதோல்வியை தழுவியது. தயாரிப்பாளருக்கு குறைந்தது ரூ.50 கோடி வரை நஷ்டம் இருக்க வாய்ப்பு இருப்பதாக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே படப்பிடிப்பில் விபத்து, பட்ஜெட் உயர்வு, கமல் கோபம், கமல் தேதிகள் பிரச்சினை, 2 பாகமாக பிரிப்பு, மோசமான விமர்சனங்கள், காட்சியமைப்பில் கோளாறுகள், வர்மக் கலைஞர்கள் புகார் என தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கியது.

indian 2

தற்போது மீண்டும் ஓடிடி வெளியீட்டால் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது ‘இந்தியன் 2’. வட இந்தியாவில் மிகவும் வலிமை வாய்ந்த சங்கம் ‘அகில இந்திய மல்டிப்ளக்ஸ் சங்கம்’. இந்தச் சங்கம் படம் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. வட இந்தியாவில் படத்தை வெளியிட வேண்டும் என்றால், இந்தச் சங்கத்தின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே வெளியிட முடியும்.


‘இந்தியன் 2’ படத்தின் இந்திப் பதிப்பான ‘இந்துஸ்தானி 2’ திரைப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது. ஆனால், 8 வாரங்கள் கழித்து வெளியீடு என்றால் செப்டம்பர் 8-ம் தேதி தான் வெளியிட வேண்டும். இந்த வெளியீடு குறித்து விளக்கம் அளிக்க ‘இந்தியன் 2’ படக்குழுவினருக்கு அகில இந்திய மல்டிப்ளக்ஸ் சங்கம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

அகில இந்திய மல்டிப்ளக்ஸ் சங்கத்தின் கீழ் தான் பிவிஆர் ஐநாக்ஸ், சினிபோலிஸ் உள்ளிட்ட முக்கியமான திரையரங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சர்ச்சையின் மூலம் ‘இந்தியன் 3’ வெளியீட்டுக்கு சிக்கல் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

Share this story