உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2'... விஷ்ணு விஷாலுக்கு பதில் இவர்தான் ஹீரோ !
'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷாலுக்கு பதில் புதிய ஹீரோ நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் சயின்ஸ் பிக்ஷன் ஜேர்னர் படங்கள் அரிதாகவே உருவாக்கப்படும். அப்படி உருவாக்கினாலும் எளிய மக்களையும் சென்றடைந்து வெற்றி பெற்ற படங்கள் ஒரு சில மட்டுமே. அப்படி உருவாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'இன்று நேற்று நாளை'.
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் மியா ஜார்ஜ் நடிப்பில் அந்தப் படம் வெளியானது. நடிகர் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் உருவாகியிருந்தது. இதையடுத்து ரசிகர்கள் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டாம் பாகம் உருவாகும் என படத்தின் தயாரிப்பாளர் சிவி குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிகர் விஷ்ணு விஷாலே நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் விலகிவிட்டாராம். அவருக்கு பதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் 'இன்று நேற்று நாளை' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் இந்த படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.