சமந்தாவை அங்கீகரித்த சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி...!
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருது விழா அபுதாபியில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் மூன்று நாட்கள் என வருகின்ற 29ஆம் தேதி வரை நடக்கும் இந்த நிகழ்வில் பிரபு தேவா, ராஷி கண்ணா, ராணா டகுபதி உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில் சமந்தாவிற்கு இந்தாண்டிற்கான சிறந்த பெண் என்ற பிரிவில் விருது வழங்கப்படவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவப்படுத்தும் விதமாக இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சமந்தா நன்றி தெரிவித்துள்ளார். இந்த விருது தன்னை மெருகேற்றிக் கொள்ள உந்துதலாக இருக்கிறது என சமந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வரும் சமந்தா, விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றுள்ளார். கடைசியாக விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது கைவசம் 'சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.