கங்குவா பட வெளியீடு தள்ளிப்போகிறதா?
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா பட வெளியீடு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தயாரிப்பாளர் தனஞ்செயன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடலான 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' சமீபத்தில் வெளியானது. தேவி ஸ்ரீ பிரசாத் கங்குவா படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், முதல் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
உலகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படம் மிகப் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே தேதியில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து ஸ்டூடியோ கிரீன் சிஇஓ தனஞ்செயன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். கங்குவா திட்டமிட்டபடி அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என்று தெரிவித்தார். எனவே, கங்குவா அக்டோபர் 10 அன்று திட்டமிட்டபடி வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.